Wednesday, December 9, 2009

சித்தமல்லி ஸ்ரீ குலசேகர ஸ்வாமி






இந்த தேசம் ஆண்மிகம் ததும்பும் பூமி. நாயன்மார்கள் மற்றும்
அருளாளர்கள் இரைவனைப் போற்றிப் பரவிய பூமி. இங்கு, எத்தனையோ
ஆலயங்கள்.......வழிபாட்டு மன்றங்கள் காலம் காலமாக வைதிய சிகிச்சை முறைகள் இருந்தாலும், இறைவனை இடையறாது. வணங்கினால், தீராத பிணிகளும் தீரும் என்பதை பண்னெடுங்காலமாக நிரூபித்து வரும் புண்ணிய பூமி இது.





தமிழகத்தை ஆண்ட மன்னர்கள் பலர். இறை வழிப்பாட்டின் அவசியத்தை உணர்ந்து, தங்களது பகுதிகளில் எண்ணற்ற ஆலயங்களை ஸ்தாபித்தனர். அதுமட்டுமின்றி, "பல தேசங்களை வென்றதன் அடையாளமாக அங்கும் ஆலயங்களை அமைத்தனர். குடிமக்களின் குறைவில்லா வாழ்வுக்கும் இந்த ஆலயங்களில் உள்ள கடவுளர்கள் அருள்பாலித்தனர்.





இப்படி சேர, சொழ பாண்டியர்கள், நாயக்கர்கள் மற்றும் பல்லவர்கள் உள்ளிட்டோர் தமிழத்தில் பிரமாண்ட திருக்கோயில் களைக் கட்டி புண்ணியம் தேடிக் கொண்டனர். இவற்றில், சோழர்களின் பங்கு மகத்தானது. சோழப் பேரரசர்கள் தாங்கள் ஆட்சி செய்த பகுதிகளில் ஏராளமான ஆலயங்களைக் கட்டி, அவற்றின் நிரந்தர வழிபாட்டுக்கு நிவந்தங்களையும் ஏற்படுத்தினார்கள். சோழநாட்டில் உள்ள திருக்கோயில் ஓன்றையே இங்கு தரிசிக்க இருக்கிறோம்.





முத்துப்பேட்டைக்கு அருகே உள்ள சிறு கிராமம் - சித்தமல்லி. இங்குதான் அருள்மிகு அபிராமி அம்மன் சமேத அருள்மிகு குலசேகர ஸ்வாமி திருக்கோயில் அமைந்துள்ளது. கட்டடக்கலை, நுட்பம் மற்றும் புராணம் சார்ந்த வழிபாட்டுக்கு உதாரணமாகத் திகழ்கிறது இந்த ஆலயம். 11-ஆம் நூற்றாண்டில் மன்னன் குலசேகர பாண்டியன். இந்த ஆலயத்தைக் கட்டுவித்தானாம். பிற்கால சோழ மன்னனாக 3-ஆம் ராஜராஜன் காலத்தில் கி.பி. 12 -ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகவும் தகவல் உண்டு தவிர, 3-ஆம் ராஜேந்திரன், நாயக்கமன்னர்கள் முதலானோர் இந்த ஆலயத்துக்கு திருப்பணிகள் செய்துள்ளனராம். கி.பி. 1256-ஆம் ஆண்டு கல்வெட்டில், " ராஜேந்திர சோழ வள நாட்டு, புறக்கரம்பை நாட்டு சுத்தமல்லி சதுர்வேதி மங்கலத்து" என்று சித்தமல்லி ஊரின் பெயர் குறிப்பிடப்ப்ட்டுள்ளது.





"பாண்டவர்கள் தங்களது வனவாசத்தின்போது, சித்தமல்லியில் சில நாட்கள் தங்கினராம். அப்போது, இந்த ஊர், முன்னூதி மங்கல அக்ரஹாரம் எனப்பட்டது. இங்குள்ள ஸ்ரீ குலசேகர ஸ்வாமியை பாண்டவர்கள் வணங்கி வந்துள்ளனர்" என்று சொலலப்படுகிறது. ஒரு காலத்தில் இந்த ஊரில் உள்ள அக்ரஹாரத்தில், ஏராளமான அந்தணர்கள் வசித்து வந்தனர். அப்போது தினமும் இந்த குலசேகர ஸ்வாமி ஆலயத்துக்கு வந்து ஈசனையும் அன்னை அபிராமியையும் வணங்கிச் செல்வர். தவிர, கோயில் திருவிழாக்களிலும் ஒரு கட்டளையை ஏற்று, அதைச் சிறப்புற செய்து, ஈசனின் அருள் பெற்று சிறந்து விளங்கினர்.


ஸ்வாமி விக்கிரகங்களின் வஸ்திரங்களை சலவை செய்வதற்கு தனியே தொழிலாளி ஒருவர் பணி புரிந்த காலமும் உண்டு!


முன் காலத்தில் எழிலார்ந்த கோலத்துடன் திகழ்ந்து வந்துள்ளது. ஸ்ரீ குலசேகர ஸ்வாமி ஆலயம் தினப்படி பூஜைகள், விசேஷங்கள், விழாக்கள் - என திரண்ட பக்தர் கூட்டத்தின் நடுவே விமரிசையாக நடைபெற்றதாம்! கோயிலில் அனுதினமும் மேலளம் வாசிக்க வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு-- முதலான நிரந்தர வழிபாடுகளுக்கு கட்டளைதாரர்கள் பலரும் இருந்துள்ளனர். சந்நிதியில் தீபம் ஏற்ற இலுப்பை எண்ணெயத்தான் பயன்படுத்துவார்களாம். இதற்காக கோயிலுக்குச் சொந்தமாக இலுப்பைத் தோப்பே இருந்ததாம்! ஸ்வாமி விக்கிரகங்களுக்கு அணிவிக்கப்டும் வஸ்திரங்களைத் தினமும் துவைத்து சலவை செய்து முறைப்படி பராமரிக்க, தனியே தொழிலாளி ஒருவர் பணிபுரிந்த காலமும் உண்டு.


இவையெல்லாம் பழங்கதை! இன்றைக்கு ஆலயத்தைத் தரிசிக்கும் போது, "ஏக்கப் பெருமூச்சுதான்" மேலிடிகிறது. குடமுழுக்கு நடந்து பல வருடங்கள் ஆகி விட்டதாம். மண்டபங்கள், ராஜகோபுரம், விமானங்கள், பிரகாரம் மற்றும் சந்நிதிகள்ஆகியவை ரொம்பவே சிதிலம் அடைந்துள்ளன.


நித்திய பூஜைக்கே திண்டாட்டமான நிலையில் இருக்கிறது. கோயிலுக்கு பெரிய வருமானம் என்று ஏதுமில்லை. உள்ளுர் பக்தர்கள் சிலரது கைங்கர்யத்தால் ஓரளவு பூஜைகள் நடந்து வருகின்றன. புராதன ஆலயத்தின் இப்போதைய


நிலையைக் காண்போரது மனம் வேதனைப்படத்தான் செய்கிறது. நல்லுள்ளம் கொண்ட அன்பர்களது முயற்சி மற்றும் உள்ளூர்க்காரர்களின் ஒத்துழைப்பால், கடந்த 17.11.2008 அன்று பாலாலயம் நடைபெற்றது. திருப்பணி வேலைகள் மெள்ள துவங்கி உள்ளன். பழமை வாய்ந்த அருமையான சிவாலயம் இது. மீண்டும் கம்பீரமாக நிற்க வேண்டும் என்பதே உள்ளூர்வாசிகளது விருப்பமும் பிரார்த்தனையும்!


இனி ஆலய தரிசனம் செல்வோம்......


மேற்கு நோக்கி அமைந்த திருக்கோயில், விசேஷ நாளில் மட்டும் இந்த வாசலைத் திறக்கின்றனர். மற்ற நாட்களில், தெற்கு வாசல் மட்டும் திறந்திருக்கும். மேற்கு திசை முகப்பில், செங்கல் கட்டுமானத்துடன் கூடிய மூன்றடுக்கு ராஜகோபுரம் பராமரிப்புக் குறைவால், கோபுரத்தின் மேற்புறத்தில், மரம், செடி கொடிகள் படர்ந்துள்ளன. எதிரில் திருக்குளம், தேவர்குளம் இருக்கிறது.


இந்த ஆலயத்தில் ந்டைபெறும் விழாக்களுள் "வைகாசி விசாகம்" முக்கியமான ஒன்று. அப்போது, தேவர்குளத்தில், தெப்பம் விடுவார்களாம்! தெப்பத்தில் உலா வரும் இறைவனை தரிசிக்க வெளியூர் பக்தர்களும் திரளாக வந்து விடுவார்களாம் என்று சொல்லப் படுகிறது. கோயிலுக்கு எதிரில், "மகான் ஸ்ரீ சுப்ரமண்ய யதீந்திராளின் அதிஷ்டானம்" அமைந்துள்ளது.


கண்களைக் கவரும் ஸ்ரீ தண்டாயுதபாணி





விஸ்தாரமான ஆலயத்தினுள் நுழைகிறொம். பலிபீடம், நந்திதேவர் மண்டபம் இடப் பக்கம் நடந்தால் பிரகாரத் துவக்கம். நாகர் மற்றும் முஞ்சூறு வாகனத்துடன் விநாயகர். இங்குள்ள ஸ்ரீ தண்டாயுதபாணி ஸ்வாமியின் விக்கிரகம் கலைநயத்துடன் காணப்படுகிறது. கால்களில் பாதரட்சைஅணிந்து இடக் கையை இடுப்பில் வைத்து, வலக் கையில் இருக்கும்தண்டத்தை பீடத்தில் ஊன்றியபடி காட்சி தருகிறார் இவர். மொட்டைத் தலை மற்றும் கழுத்தில் ருத்திராட்ச மாலைகள். இவரது திருக்கரத்தில் இருக்கும் தண்டத்தை கண்டினால், வெண்கல உலோகத்தைச் கண்டியது போல் ஓசை எழுகிறது. ஒரே கல்லால் ஆன அற்புத வடிவம் இந்த தண்டாயுதபாணி!


ஸ்ரீ மீனாட்சி அம்மனுக்கும் ஸ்ரீ சுந்தரேஸ்வரருக்கும் சந்நிதி உண்டு. பிரகார வலத்தின்போது கோஷ்டங்களில் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி, ஸ்ரீ நர்த்தன விநாயகர் ஆகியோரை தரிசிக்கிறோம். தவிர, ஸ்ரீ விநாயகர், வள்ளி- தேய்வானை சமேத ஸ்ரீ சுப்ரமண்யர், ஸ்ரீ சண்டிகேஸ்வரர் ஆகியோருக்குத் தனிச் சந்நிதிகள். ஸ்ரீ பைரவர், சூரிய பகவான், நவக்கிரங்கள் முதலான தெய்வத் திருவுருவங்களையும் தரிசிக்கிறோம்.


தல விருட்சம் "வில்வம்".


பிரகார வலத்தின்போது கிணறு தென்படுகிறது. "ஒரு காலத்தில் இந்த கிணற்று நீரைக் கொண்டுதான் ஸ்வாமிக்கு அபிஷெகம் செய்வார்கள். கோயிலைச் சுற்றி உள்ள இடங்களில், உப்புச் சுவையுடன் நீர் கிடைத்தாலும், இந்த கிணற்று நீர் "இளநீர்" போல் அத்தனை சுவையாக இருக்குமாம்!! கிணற்றை அதிசய சுவை என்று குறிப்பிடலாம். இங்கு வரும் வெளியூர் பக்தர்கள், இந்த நீரைபருகி விட்டு ஆச்சரியப்படுவர். இறை வழிப்பாட்டுக்காகவே அமைந்த அற்புத தீர்த்தம் இது" என்றார் சிததமல்லி அன்பர்கள்.


மேற்கு நோக்கிய ஈசன் சந்நிதி, வெளியே விநாயகர், துவார ஸ்கந்தர் இறைவனான ஸ்ரீ குலசெகர ஸ்வாமியை அகத்தியரும் பூஜை செய்து வழிபட்டதாகச் சொல்கிறார்கள். ஈசனின் கருவறைக்கு அர்த்த மண்டபம், மகா மண்டபம், ஆகியன உண்டு.


ஆவுடையாரின் மேல் பெரிய பாணம் லிங்கத் திருமேனியில் வலது பாகத்தில் "வடு" ஒன்று தெரிகிறது. அர்ஜுனன் எய்த அம்பால் ஈசனுக்கு ஏற்பட்ட "வடு"வாம் இது!! "பாண்டவர்கள், வனவாசத்தின் போது இங்கு தங்கி இருந்தனர். அப்போது, தனக்கு தரிசனம் தரும்படி ஸ்ரீ குலசேகர ஸ்வாமியிடம் வேண்டினான் அர்ஜுனன். ஆனால், ஈசன் தரிசனம் தரவில்லை. இதில் கோபமுற்று லிங்கத் திருமேனியின்மேல் அம்பு ஏய்தானாம்! அதனால் ஏற்பட்ட தழும்பே இன்றும் காணப்படுகிறது". [இதனை நான் கண்டறிந்த உண்மை!]





வருடந்தோறும் மாசி மாதம் 21ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை மூன்று நாட்களிலும் மாலை வேளையில், சூரிய பகவான் தன் கிரணங்களால் ஸ்ரீ குலசேகர ஸ்வாமியை வணங்குவது வழக்கம். இந்த நாட்களில், சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. சகல வளங்களையும் அருளும் சர்வேஸ்வரனை உளமாரத் தொழுகிறோம்.





இங்கு அருள் பாலிக்கும் அன்னையின் திருநாமம் அபிராமி அம்மன். சுமார் நாங்கடி உயரத்தில் நான்கு திருக்- கரங்களுடன் தெற்கு திசை நோக்கி தரிசனம் தருகிறாள். கேட்ட வரம் அருளும் சர்வாலங்கார பூஷிதையை வணங்குகிறோம்.


இதுபோன்ற புராதன பூண்ணிய ஸ்தலங்கள் அடுத்தடுத்த தலைமுறையினருக்கும் காலங்களைக் கடந்து தரிசனம் தர வேண்டாமா?


மனம் இருந்தால் மார்க்கம் உண்டு----தனம் சேர்த்தால் தரிசனம் உண்டு---இறைவனின் திருப்பணிக்கு இயன்றவரை உறுதுணையாக இருப்போம்!


கவலை இல்லாத மணிதர்களே கிடையாது......ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கவலை இருக்கிறது. ஒருவருக்கு நிரந்தரமான-கை நிறைய சம்பளம் கொண்ட வேலை கிடைக் கவிலையே என்ற கவலை.....இன்னொருவருக்கு வயது கடந்தும் திருமணம் நடக்க வில்லையே என்ற கவலை..... இப்படி, ஒவ்வொருவரது கவலைகளின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. உங்களுக்கும் இதுபோன்ற கவலைகள் இருந்தால், இந்த கோயிலுக்கு வாறுங்கள்...இங்குள்ள "குலசேகர பெருமானை" தரிசித்து வழிபட்டால், உங்கள் கவலைகள் எல்லாம் பறந்து போகும்....நினைத்த காரியங்கள் அத்தனையும் நிறைவேறிவிடும் என்கிறார்கள்!







எங்கே இருக்கிறது சித்தமல்லி?


திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இருந்து முத்துப்பேட்டை செல்லும் சாலையில் உள்ளது கிராமம் சித்தமல்லி.


மன்னார்குடியில் இருந்து சுமார் 28 கி.மீ. தொலைவு. முத்துப்பேட்டையில் இருந்து சுமார் 6 கி.மீ. தொலைவு.


மன்னார்குடி-முத்துப்பேட்டை சலையில் பேருந்து வசதி உண்டு. சித்தமல்லி. பேருந்து நிறுத்ததில் இறங்கினால், சுமார் பத்து நிமிட நடை தூரத்தில் ஆலயத்தை அடையலாம்.


இவ்வளவு சிறப்புமிக்க இந்த கோயில் மீண்டும் நித்திய பூஜை மற்றும் கும்பாபிஷேகம் காணவேண்டும் என்றால், இவை அனைத்தும் நம் மக்கள/பக்தர்கள் கையில் தான் இருக்கு. கும்பாபிஷேகம் வரும் 2010 ஜுன்/ஜுலை மாதம் நடக்க இருக்கிறது.


மேலும், இக்கோயில் திருப்பணி மற்றும் விவரங்களுக்கு நீங்கள் அனுக வேண்டிய நபர்:


திருமதி எஸ். மஹாலட்சுமி, சென்னை. போன் : 99400 53289 / 98400 53289.






மகான் ஸ்ரீசுப்ரமண்ய யதீந்திராள்






சித்தமல்லி கிராமத்தில் அவதரித்த மகா புருஷர் - ஸ்ரீசுப்ரமண்ய சாஸ்திரிகள் என்கிற சுப்ரமண்ய யதீந்திராள். குலசேகர ஸ்வாமி கோயிலுக்கு அருகிலேயே உள்ளது இவரது அதிஷ்டானம். கி.பி 1866-ஆம் ஆண்டில் அவதரித்த இவர், இளம் வயதிலேயே சாஸ்திரம் மற்றும் வேதங்களை கற்றார். மஹாமஹோபாத்யாய மன்னார்குடி ராஜு சாஸ்திரிகளிடம் கல்வி கற்றார். காஞ்சி மகா ஸ்வாமிகளது இறைப் பணியில், தன்னையும் ஈடுபடுத்திக் கொண்டு சேவையாற்றி, மகா ஸ்வாமிகளின் அபிமானத்தையும் பெற்றார்.






ஒரு முறை மயிலாடுதுறையில் யாத்திரை மேற்கொண்டிருந்த மகா பெரியவாள், அருகே உள்ள கிராமமான கோழிகுத்தியில் சரஸ்வதி அம்மாள் என்பவரது இல்லத்தில் தங்கி இருந்தபடி, பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்தார். ஒரு நாள், திரண்டிருந்த பக்தர் கூட்டத்தின் நடுவே உரை நிகழ்த்தினார் மகா பெரியவாள். தனது பேச்சில் ஸ்ரீசுப்ரமண்ய சாஸ்திரிகளை வெகுவாகப் புகழ்ந்தார் மகா பெரியவாள். "பொதுவா ஒண்ணு இருந்தா இன்னொண்ணு இருக்காது. இது உலகத்தோட இயற்கை. கல்வி இருக்கும் இடத்தில் பணம் இருக்காது; பணம் இருக்கும் இடத்தில் கல்வி இருக்காது. கல்வி, பணம் - இவை இரண்டும் இருந்தால் அங்கே குழந்தைச் செல்வம் இருக்காது. கல்வி, பணம், குழந்தைச் செல்வம் - இவை மூன்றும் இருந்தால், அவரது வீட்டில் எவருக்காவது உடல் நலன் படுத்திக் கொண்டே இருக்கும். ஒரு வேளை இவை நான்குமே சுபமாக இருந்தால் அந்த கிரஹத்தில் நிம்மதி இருக்காது. இதை பரவலாக நாம் பார்க்கக் கூடிய நிஜம். ஆனால், இதற்கு விதிவிலக்கானவர் - சித்தமல்லி சுப்ரமண்ய சாஸ்திரிகள். பக்தி, படிப்பு, செல்வம், ஆரோக்கியம் முதலான அனைத்து வளங்களையும் ஒருங்கே பெற்றவர் இவர். இது இறைவனின் அருள்! இப்போது அவருடைய மகளின் கிரஹத்தில் தங்கியபடிதான், உரை நிகழ்த்திக் கொண்டிருக்கிறேன்." என்றாராம்.


வாழ்வில் சகல வளங்களையும் பெற்று, குறைவின்றி வாழந்தவர் சுப்ரமண்ய சாஸ்திரிகள். இவருக்கு ஐந்து மகள்களும், நான்கு மகன்களும் உண்டு. ஒரு முறை சுப்ரமண்ய சாஸ்திரிகள் உடல் நலக் குறையுடன் காணப்பட்டார். அந்தக் காலத்தில் இது போன்ற தருணங்களில், 'ஆபத்சந்நியாசம்' வாங்கிக் கொள்வார்கள். அதாவது, இந்த சந்நியாசத்தை ஏற்றால், மறு பிறவி எடுத்ததாக ஆகிவிடுமாம். இதன் மூலம், தற்போது இருந்து வரும் நோய் உள்ளிட்ட பிரச்னைகளில் இருந்து விடுதலை கிடைத்து விடும் என்பது சிலரது நம்பிக்கை.


ஆபத்சந்நியாசத்தை அவரவரே எடுத்துக் கொள்ளலாம். எனினும் பிறகு சந்நியாசியிடம் சென்று முறைப்படி ஆபத்சந்நியாசம் எடுக்க வேண்டுமாம்.





முதலை ஒன்று, ஆற்றில் நீராடிக் கொண்டிருந்த ஸ்ரீ ஆதிசங்கரரின் காலை கவ்வி இழுக்க .. இந்த ஆபத்தில் இருந்து தப்பிக்க ஸ்ரீஆதிசங்கரர், ஆபத்சந்நியாசம் எடுத்துக் கொண்டாராம் (இதற்கு தன் அன்னையிடம் நிபந்தனை விதித்தார் என்பது தனிக்கதை). இதையடுத்து, முறைப்படி இந்த சந்நியாசத்தை எடுத்துக் கொண்டார்.


சுப்ரமண்ய சாஸ்திரிகளும் ஆபத்சந்நியாசம் எடுத்துக் கொண்டவர். எப்படி?







ஒரு நாள் காஞ்சிபுரத்தில் மகா பெரியவாளைச் சந்தித்து, "எனக்கு ஆபத்சந்நியாசம் வழங்குங்கள்" என்றாராம் சுப்ரமண்ய சாஸ்திரிகள். நீ ஊருக்குப் போ. பண்டிதர்களை அனுப்புகிறேன்" என்றாராராம் ஸ்வாமிகள். இதையடுத்து சில நாட்களில் சுப்ரமண்ய சாஸ்திரிகளின் உடல் நிலை மோசமானது. அப்போது, காஞ்சிபுரம் ஸ்ரீமடத்தில் இருந்து ஸாஸ்திரிகளுக்கு ஆபத்சந்நியாசம் வழங்குவதற்காக இரண்டு பண்டிதர்கள் சித்தமல்லிக்கு வந்தனர்.






ஆபத்சந்நியாசம் எடுத்துக் கொண்டால், மூன்று நாட்கள் மட்டுமே வீட்டில் தங்கலாம். சாஸ்திரிகளோ அப்போது உடல்நிலை முடியாமல் இருந்தார். இந்த நேரத்தில் எப்படி ஆபத்சந்நியாசம் கொடுப்பது என்று வந்தவர்களும் வீட்டில் இருந்தவர்களும் குழம்பினர். எனினும் ஆபத்சந்நியாசம் கொடுக்கப்பட்டது.


இரண்டு நாட்கள் கழிந்தன, 3-வது நாள்... சாஸ்திரிகளின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் தெரிந்தது. மறுநாள், ஆபத்சந்நியாச தர்மப்படி சாஸ்திரிகள் வேறு இடத்தில் தங்க வேண்டும். அதற்காக, மடம் ஒன்றும் தயார் செய்யப்பட்டது. குடும்பத்தினர் மற்றும் உள்ளூர்க்காரர்கள் அனைவருக்கும் ஆசி வழங்கியவர், கிலோ கணக்கில் கற்பூரத்தைக் கொண்டு வந்து ஏற்றச் சொன்னார். கற்பூரம் கொழுந்து விட்டு எரியும்போது, சாஸ்திரிகளின் சிரசில் இருந்து ஓர் ஆத்ம ஜோதி புறப்பட்டு, கற்பூர ஜோதியுடன் இரண்டறக் கலந்து வானவெளியில் செல்வதைக் கண்டதாகச் சொல்வர்.






அதே நேரத்தில் காஞ்சிபுரம் மடத்தில் இருந்த மகா பெரியவாள், "அதோ ... சுப்ரமண்ய சாஸ்திரிகள் மோட்சத்துக்குப் போயிண்டிருக்கார், பாருங்கோ" என்று உடன் இருந்த சிஷ்யர்கள் மற்றும் பக்தர்களிடம் வானத்தைக் காட்டிச்சொன்னாராம். இது நடந்தது கி.பி. 1933-ஆம் ஆண்டில்! இதுவே இவரது மகாசமாதி வருடம். சுப்ரமண்ய சாஸ்திரிகளது 76-வது வருட ஆராதனை உற்ஸவம் கடந்த 07-11-09 அன்று சித்தமல்லியில் உள்ள அவரது அதிஷ்டானத்தில் நடந்தேறியது.





அதிஷ்டானம் வந்து வணங்கும் பக்தர்களுக்கு இன்றைக்கும் இன்னருள் புரிந்து வருகிறார் சுப்ரமண்ய சாஸ்திரிகள்.






மேலும் இந்த மஹானைப் பற்றிய விவரங்களுக்கு
________________________________________________________




இவ்வளவு சிறப்புமிக்க இந்த அதிஷ்டானம் மக்கள் மத்தியில் மிகப் ப்ரபலமாக பேசப் படவேண்டும்...நம் மக்கள் எல்லோரும் வந்து தரிசிக்க வேண்டும். இந்த மகானின் ஆசிகளை பெற வேண்டும்.


மேலும் ஸ்ரீ சுப்ரமண்ய சாஸ்திரிகள் யதீந்திராளின் அதிஷ்டானம் பற்றிய விவரங்களுக்கு நீங்கள் அனுக வேண்டிய நபர்கள்:


1. ஸ்ரீ வி. சுப்ரமனியன், அட்வகேட், சென்னை. போன்: 98407 89261


2. ஸ்ரீ "ஜ்யோதிஷரத்னா" ராமன், பாண்டிச்சேரி. போன் : 94433 09487 / 0413-2251842

3 comments:

  1. Really Happy to read the blog.

    Keep it up.

    Can you send your email id? I can send the more photos about sithamalli.

    Suthanthira Selvan
    selvaminbox@yahoo.com

    ReplyDelete
  2. Tks for your comments and also am very glad to note that you have more pictures of Siddhamalli with you. You can send them to the below mentioned email id:

    lalitharamachandran17@gmail.com

    Also keep viewing my other websites too and ofcourse your comments are always welcome.

    Lalitha Ramachandran

    ReplyDelete
  3. மகான் சுப்பிரமணிய சாஸ்திரி பற்றிய அரிய தகவல்களுக்கு மிக்க நன்றி. பரமாச்சாரியரின் அருள் என்றும் இருக்கட்டும்.

    ReplyDelete

Related Posts with Thumbnails